Tamilசெய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி – மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். 21ம் நூற்றாண்டில் நேரு குடும்பத்தினர் அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற கார்கே, முன்னாள் தலைவரான சோனியா காந்தியை அவரது ஜன்பத் இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்தார். இதற்காக அப்பாயின்மென்ட் கேட்டார். ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சோனியா காந்தியே ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்துக்குச் சென்றார். மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த சோனியா காந்தி, கார்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்குச் செல்வது அரிதான நிகழ்வு. இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழல் வழக்கில் 2015 ம் ஆண்டில் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு பேரணி நடத்தப்பட்டது. அப்போது சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் வீட்டிற்குச் சென்றார். அதன்பின்னர் அவர் சென்ற இரண்டாவது காங்கிரஸ் தலைவரின் இல்லம் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.