Tamilசெய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மாட்டார் – கட்சி வட்டாரம் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன்பின்னர் அவரை தலைவர் பதவியில் அமர்த்த மூத்த தலைவர்கள் முயற்சி செய்தும் அவர் ஏற்கவில்லை. கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.

நிரந்தர தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கு கட்சியினர் மீண்டும் ஆர்வம் காட்டினர். ஆனால் அவர் தலைமை பதவியை ஏற்க முன்வராத நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என் எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், சில மூத்த தலைவர்கள் போட்டியிட திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சசிதரூர் சந்தித்தார்.

டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூருக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உங்கள் முடிவு. தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறும்’ என சசிதரூரிடம் சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ள யாரும் போட்டியிடலாம். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதுவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் உறுதியான நிலை. இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் திறந்த நிலையிலான நடைமுறை. தேர்தலில் போட்டியிட யாரும், யாருடைய ஒப்புதலையும் பெற வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெற்று வருகிறது. தற்போது கேரளாவில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, வருகிற 29-ந்தேதி கர்நாடகாவுக்குள் யாத்திரையை தொடங்க உள்ளார். வேட்பு மனுவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி கருத்து தெரிவிக்காமல் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடமாட்டார் என காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கிடையே தலைவர் பதவிக்கான போட்டியில், காந்தி குடும்பத்தின் நீண்ட நாள் விசுவாசியான, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இருக்கிறார். அசோக் கெலாட் தான் போட்டியிடுவதைக் காட்டிலும், ராகுல் காந்தியை எப்படியாவது போட்டியிட வைக்கவே ஆர்வம் காட்டுகிறார்.

ராகுல் போட்டியிடாத பட்சத்தில் அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தேர்தலில் சசிதரூர் வெற்றிப்பெற்றால், கட்சியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வாட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இந்த தகவலின் மூலம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பது தெரியவந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியை கட்சியின் தேசியத் தலைவராக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.