Tamilசெய்திகள்

காங்கிரஸ் சரியான பாதையில் பயணிக்கவில்லை – குஷ்பு தாக்கு

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ளது. இது அந்த கட்சித் தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.

இந்தநிலையில் நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

டெல்லியில் காங்கிரசுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் அழிக்கப்பட்டுள்ளது. நாம் போதுமானதை செய்கிறோமா, நாம் சரியானதை செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாக பதில் வரும்.

நாம் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். இப்போது இல்லை என்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்.

ஆனால் மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடி மற்றும் அமித்ஷா அராஜகக் கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி. எல்லா தோல்விகளுக்கு பிறகும் செய்வதை போல நடந்ததை மறுபார்வை பார்க்க இப்போது நமக்கு நேரம் இல்லை. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் நாம் அப்படி செய்வதில்லை.

“நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறி விடு” என்ற மகாத்மாவின் வார்த்தைகளை எடுத்துக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும். கண்டிப்பாக.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

குஷ்புவின் வேதனை மிகுந்த இந்த டுவிட்டுக்கு ஒருவர் பதிவு செய்த கமெண்ட்டில், “அரசியல் என்பது 24 மணி நேரத்துக்கான பணி… ஆனால் உங்கள் கட்சிக்கு மூர்க்கத்தனம் இல்லை, வீரியமான செயல்பாடு இல்லை, தெளிவான பார்வையும் இல்லை” என்று சரமாரியாக விமர்சித்தார்.

ஆனால் இதற்கும் குஷ்பு பதிலளித்துள்ளார். “ஒப்புக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *