கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் இழுத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பா.ஜனதா முயற்சி எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த மாதம் 18-ந் தேதி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் நடந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இவர்கள் 4 பேரும் பா.ஜனதா கட்சியில் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதால் தான் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினர். இதனால், அவர்களுக்கு 2-வது முறையாக நோட்டீசு அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீசில் 4 பேரும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. நோட்டீசு அனுப்பி ஒரு வாரம் ஆனபோதிலும் 4 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிலையில், வருகிற 6-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் அன்றைய தினம் கவர்னர் வஜூபாய் வாலா உரை ஆற்றுகிறார். 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அவர்கள் 4 பேரும் சட்டசபையில் கலந்துகொண்டால்தான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருக்காது. இல்லையெனில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் நெருக்கடி ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு 4 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் மூலமாக தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர். இவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதா கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் 4 பேருக்கும் 2 முறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சட்டமன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இன்னும் சில நாட்கள் உள்ளதால் அவர்கள் 4 பேரும் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.