Tamilசெய்திகள்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் – சோனியா காந்திக்கு எதிர்ப்பாளர்கள் கடிதம்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதனால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட இயலவில்லை. இதையடுத்து குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்பட 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார்கள். இதையடுத்து ஆகஸ்டு 21-ந் தேதி முதல் செப்டம்பர் 21-ந் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க சில மூத்த தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்று ராகுல்காந்தி பிடிவாதமாக மறுத்து வருகிறார். இதனால் வருகிற 28-ந் தேதி சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக 28-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

சோனியா சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் அவர் தற்காலிகமாக தலைவர் ஒருவரை தேர்வு செய்ய விரும்புகிறார். அசோக் கெலாட் அல்லது மல்லிகார்ஜூன கார்கே ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதில் அசோக் கெலாட்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கடைசி வரை ராகுலை தலைவராக்க போராடுவேன் என்று தெரிவித்து உள்ளார். ஆனால் ராகுல் பிடிவாதமாக இருப்பதால் தற்காலிகமாக ஒருவர் தலைவர் பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சோனியா, ராகுலை தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள பிரியங்காவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரலாம் என்று சிலர் தீவிரமாக உள்ளனர். ஆனால் பிரியங்காவை தலைவராக்க ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியில் உள்ள குலாம்நபி ஆசாத் தலைமையிலான எதிர்ப்பாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுத ஆலோசித்து வருகிறார்கள். அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் தலைவர் பொறுப்புக்கு ஒருவரை தேர்வு செய்ய அவர்கள் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.

அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே தவிர முகுல் வாசினிக், மீரா குமார், குமாரி செல்ஜா, சுசில் குமார் ஷின்டே ஆகியோரது பெயர்களும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. ஏக மனதாக தேர்வு செய்யப்பட முடியாத பட்சத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்து ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று சோனியாவை எதிர்க்கும் 23 தலைவர்களில் ஒருவர் உறுதிபட தெரிவித்து உள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு பெறுவார்? எப்படி தேர்வு பெறுவார் என்பதில் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.