X

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் சசிதரூர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் கேரளா எம்.பி. சசி தரூரும் போட்டியிடுவார்கள் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை விட்டு தர அசோக்கெலாட் மறுத்து விட்டதால் அவர் மீது சோனியா கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கெலாட் அறிவித்தார்.

இதனிடையே திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு கட்சி தலைமையும் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அதை கைவிட்டதுடன், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டுக்கு இந்தியாவின் பாலத்தை கட்டியவருக்கு இன்று காலை அஞ்சலி செலுத்துகிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறியதுபோல் இந்தியா ஒரு பழைமையான நாடு. ஆனால் ஒரு இளம் தேசம். இந்தியா வலிமையான சுதந்திரமான தன்னம்பிக்கை மற்றும் உலக நாடுகளின் சேவையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன்.