காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் – அமைச்சர் அமித்ஷா தாக்கு

இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
லட்சக்கணக்கானோரை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது, நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா அரசுகள்தான். பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. வேறு எந்த நாட்டிலும், எந்த தலைவரும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை. அதனால், உலக மக்கள் மோடியை பாராட்டுகிறார்கள். முன்பு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம், இப்போது நாமே தயாரிக்கிறோம்.

மோடி, களைப்பின்றி நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர். இத்தகையவர்தான் நாட்டையும், மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார். 370-வது சட்டப்பிரிவை நீக்கி, காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு சேர்த்தோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2024-ம் ஆண்டு அக்கோவில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்திமான் என்பதால், வாரணாசி, கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ஆகியவற்றில் உள்ள இந்து கோவில்களை மறுசீரமைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யர்களை கொண்டது.

பொய்யான முழக்கங்களை எழுப்பி, மக்களை முட்டாளாக்க பார்க்கும். தேர்தல் முடிந்தவுடன் தனது வாக்குறுதிகளை மறந்து விடும். பா.ஜனதா மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும். காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், இந்திய அரசியல் அரங்கில் இருந்தே காங்கிரஸ் வெளியேறி விடும். ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையை காரணமாக வைத்து, இங்கு வருவதை தவிர்த்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் இரையாக வேண்டாம். உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவர்களை நிராகரியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools