காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவிட மீட்கப்பட்ட ரூ.350 கோடி ரொக்கம்! – வைரலாகும் எக்ஸ் பதிவு
காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு கடந்த ஆண்டு பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தீரஜ் சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
கடந்த சில நாட்களாக தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு இருக்கிறது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்று வருகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு எழுதிய எக்ஸ் பதிவில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், நாட்டில் இவ்வளவு கருப்பு பணம் மற்றும் ஊழல் இருப்பதை பார்க்கும் போது என் மனம் வருத்தம் கொள்கிறது. இவ்வளவு அதிகளவு கருப்பு பணத்தை எங்கிருந்து தான் குவிக்கின்றனர் என்றே தெரியவில்லை. நாட்டில் இருந்து ஊழலை வெளியேற்ற முடியும் என்றால், அதனை காங்கிரஸ் மட்டுமே செய்ய முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஊழல் குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு, ஊழல் மற்றும் கருப்பு பணம் குறித்து எழுதியிருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.