காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுக்க பா.ஜ.க முயற்சி!
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரி பதவி கிடைக்காததால் அடிக்கடி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் கூட்டணி ஆட்சிக்கு அவ்வப்போது நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. மந்திரிசபையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டு புதிதாக 8 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். மந்திரிசபையை விரிவாக்கம் செய்த மறுநாளே, கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வந்தனர்.
மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கரும் அதிருப்தியில் உள்ளார். அவர்களை இழுக்க பா.ஜனதா முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் பா.ஜனதா நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவைக்க ஆலோசனை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை மீண்டும் விஸ்தரிக்கப்படும் என்று சித்தராமையா நேற்று அறிவித்தார். இது கர்நாடக அரசியலில் புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.