காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது ரபேல் விமான ஒப்பந்தம் குறைவான விலைக்கு போடப்பட்டுள்ளது – சிஏஜி அறிக்கையில் தகவல்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் உள்ளிட்ட விமானப்படையின் பிற கொள்முதல் குறித்த தகவல்கள் அடங்கிய சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்புத்துறை தொடர்புடைய 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மோடியின் படத்துடன் கூடிய காகித விமானங்களை கையில் வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், சமாஜ்வாடி உறுப்பினர்கள், உ.பி. பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.