மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டபோது, முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள மறுத்ததால் பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்து உள்ளது.
கடந்த தடவை (2014) சட்டசபை தேர்தலின் போதும் இதேபோன்ற கூட்டணி அரசை அமைக்க சிவசேனா விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் என்னை அணுகினர். பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்க, நமது 3 கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் உடனடியாக அந்த திட்டத்தை நான் நிராகரித்தேன். அரசியலில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ளது. எனவே இந்த திட்டம் சரிவராது என்று நான் கூறி விட்டேன்.
ஆனால் இந்த தடவை அரசியல் நிலவரம் வேறு. 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததன் மூலம் அந்த கட்சி எதிர்க்கட்சிகளை அழிக்க தொடங்கியது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சுமார் 40 எம்.எல்.ஏ.க்களை அந்த கட்சி தங்கள் பக்கம் வளைத்து போட்டு இருந்தது. அதிகாரத்துக்காக ஆசை வலை விரிக்கப்பட்டது. மிரட்டலும் விடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விட்டால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்து போய் விடும். எனவே தான் தற்போது சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முன்வந்தோம்.
ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க எங்களது கட்சி தலைவர் சோனியா காந்தியும், கட்சி மேலிட தலைவர்களும் முதலில் விரும்பவில்லை. இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்களின் கருத்தை நான் கேட்டறிந்தேன். பாரதீய ஜனதா தான் கொள்கை ரீதியில் நமக்கு எதிரி கட்சி என்ற முடிவுக்கு வந்தோம். அனைவரும் மாற்று அரசு அமைக்க விரும்பினர். அதன்பிறகே சோனியா காந்தி எங்களது கருத்தை ஏற்றார்.
இவ்வாறு பிரிதிவிராஜ் சவான் கூறினார்.
2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.