X

காங்கிரஸுக்கு சவால் விடும் மாயாவதி!

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

என்றாலும் மரியாதை நிமித்தமாக சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும், ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் வேட்பாளர்களை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிறுத்தவில்லை.

இந்த நிலையில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பததாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

இதற்கு சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் நாங்கள் கூட்டணியில் சேர்க்காததால் எங்கள் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோபத்துடன் உள்ளனர். எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே 7 தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளனர்.

இப்படி குழப்பத்தை பரப்புவதை காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் நல்ல நட்புறவு உள்ளது. அதை கெடுப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டாம்.

காங்கிரஸ் பரப்பும் வதந்திகளையும் குழப்பத்தையும் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் கட்சி இனி தினமும் ஒரு வதந்தியை பரப்பும். எனவே நமது கூட்டணி தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் போட்டியிட ஆள் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு துணிவு இருந்தால் 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அந்த துணிவு காங்கிரசுக்கும் இல்லை.

80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதாவை தோற்கடித்து விட முடியுமா? எனது இந்த சவாலுக்கு காங்கிரசார் முதலில் பதில் சொல்லட்டும்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மாயாவதியின் கருத்தை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிமொழிவதாக கூறியுள்ளார்.