பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
மோடிக்கு பிறந்த நாள் பரிசாக தடுப்பூசி போடும் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டு மத்திய சுகாதாரத்துறை செயலாற்றியது.
இதற்காக சிறப்பு முகாம்கள், அதிக தடுப்பூசி விநியோகம் என நாடு முழுவதும் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பலனாக நேற்று ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட தொடங்கிய நாளில் இருந்து நேற்றுதான் அதிகளவில் போடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இந்த சாதனை எண்ணிக்கை பிரதமர் மோடியையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் இன்று கோவா மாநில சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடி தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அப்போது அவர், தடுப்பூசி செலுத்துவதில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியல் விமர்சனத்தையும் சுட்டிக்காட்டி தனக்கே உரித்தான பாணியில் விமர்சித்தார்.
தடுப்பூசி போட்டால்தான் காய்ச்சல் வரும் என்றார்கள். ஆனால் ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கே (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என்றார்.
கோவா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி அம்மாநில சுகாதார பணியாளர்களை காணொலி உரையின்போது பாராட்டினார். கோவா மாநிலம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.