காங்கிரஸின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரணாப் முகர்ஜி மகனுக்கு வாய்ப்பு

பாராளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்கு பிறகு இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. அங்குள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

காக்கிநாடா தொகுதியில், முன்னாள் மத்திய மந்திரி பல்லம் ராஜு, பபட்லா (தனி) தொகுதியில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஜே.டி.சீலம் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் மங்கள்டோய் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. புவனேஸ்வர் கலிடா, ஒடிசா மாநிலம் கலஹண்டியில் முன்னாள் மத்திய மந்திரி பக்த சரண்தாஸ், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools