காங்கிரசுடன் கூட்டணி வைத்தது கசப்பான அனுபவம் – தேவேகவுடா வருத்தம்

பா.ஜனதா, காங்கிரசுடன் கூட்டணி வைத்து கசப்பான அனுபவத்தை பெற்றோம். சட்டசபை இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசை எதிர்க்கும் விஷயத்தில் ஜனதா தளம்(எஸ்) மென்மையான போக்கை பின்பற்றுவதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது தவறு. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளுக்கு எதிராகவும் நாங்கள் மென்மையான போக்கை காட்ட மாட்டோம். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

மங்களூரு மாநகராட்சியில் 15 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம். எங்கள் கட்சிக்கு இருக்கும் பலத்தை பொறுத்து போட்டியை எதிர்கொள்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எக்காரணம் கொண்டும் பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக நாங்கள் மென்மையாக செயல்பட மாட்டோம்.

கனகபுராவிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் யாரை கண்டும் பயப்படவில்லை. வருகிற 12-ந் தேதி எங்கள் கட்சியின் எம்.எல்.சி.க்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இதில் அவர்களின் கருத்து வேறுபாடுகள் சரிசெய்யப்படும்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் களின் வழக்கில் இன்று (அதாவது நேற்று) தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸ் தாக்கல் செய்த எடியூரப்பாவின் ஆடியோ விவகாரத்தால் தீர்ப்பு தள்ளிப்போய் உள்ளது. அந்த ஆடியோ மூலம் கோர்ட்டு தீர்ப்பு என்னவாகுமோ தெரியவில்லை. அதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற முடியாது.

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடும். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். 50 சதவீத வேட்பாளர்களை இறுதி செய்துள்ளோம். சில தொகுதிகளில் இளைஞர்கள் முன்வருகிறார்கள். சட்டசபை இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. எங்கள் கட்சி தனித்து போட்டியிடும்.

பா.ஜனதா, காங்கிரசுடன் கூட்டணி வைத்து கசப்பான அனுபவத்தை பெற்றோம். இனி அந்த கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சியில் இருக்கும்போதும், நாங்கள் தனித்தே செயல்படுவோம். குருமிட்கல் தொகுதியில் எங்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி யாதகிரியில் நான் போராட்டம் நடத்தினேன். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற 15-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools