பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்கிறார்.
மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.
வழக்கமாக பெட்டியினுள் வைத்து பட்ஜெட் உரை பேப்பர்கள் கொண்டுவரப்படும். இந்த நடைமுறையை மாற்றி கடந்த முறை சிவப்பு நிற துணியால் செய்யப்பட்ட பையில் நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் பேப்பர்களை எடுத்து வந்தார். இந்த தடவை முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. காகிதத்தில் அச்சிடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது ஒரு இடைக்கால பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.