கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்து 2010-ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் புதிய குறும்படத்தை ஐபோனில் படமாக்கி கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
கொரொனா ஊரடங்கினால் சிம்புவும், திரிஷாவும் அவரவர் வீட்டில் இருந்து செல்போனில் உரையாடுவதுபோல காட்சிகள் உள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்தியாக நடித்த சிம்புவும் ஜெஸியாக வந்த திரிஷாவும் காதலிப்பது போன்றும் இறுதியில் காதல் கைகூடாமல் திரிஷா இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதுபோலவும் காட்சி இருந்தது.
குறும்படத்தில் பலவருடங்களுக்கு பிறகு இருவரும் பேசிக்கொள்வதுபோல் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. திரிஷாவிடம் சிம்பு போனில் ‘இப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்கிறார். அதற்கு திரிஷா, ‘எனக்கு 2 குழந்தைகள்’ உள்ளனர் என்கிறார்.
திருமணமான பெண்ணிடம் பழைய காதலன் எனக்கு நீ வேண்டும் என்று சொல்வது கள்ளக்காதலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது என்றும், அடுத்து கவுதம் மேனன் இயக்க உள்ள விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் கள்ளக்காதல் கதைதானா? என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கண்டித்து வருகின்றனர். கேலி செய்து மீம்ஸ்களும் வருகின்றன.
திரவுபதி பட இயக்குனர் மோகனும் கவுதம் மேனனை விமர்சித்து, தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய இளைஞர்கள் உங்கள் படங்களை பின்பற்றுகின்றனர். அவர்கள் மனதில் விஷத்தை கலக்க முயற்சி செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். கவுதம் மேனனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.