X

கவுதம் கம்பீருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

டெல்லியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பீர் காஷ்மீர் பிரச்சினை உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி ‘ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து இ-மெயில் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. பின்னர் மறுநாளும் அதே இ-மெயில் முகவரியில் இருந்து வந்த மிரட்டலில், காஷ்மீர் பிரச்சினை மற்றும் அரசியலில் இருந்து ஒதுங்காவிட்டால், கொலை செய்வோம் என கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து கம்பீருக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைபை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் அந்த அமைப்பிடம் இருந்து நேற்று மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இ-மெயிலில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், ‘உங்கள் டெல்லி போலீசும், ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்வேதாவும் எதையும் செய்ய முடியாது. டெல்லி போலீசிலும் எங்கள் உளவாளிகள் இருக்கிறார்கள். உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களையும் பெற்று இருக்கிறோம்’ என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணைபை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கம்பீருக்கு 6 நாட்களில் 3-வது முறையாக கொலை மிரட்டல் வந்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.