இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. வொர்செஸ்டரில் நடக்கும் லீக் போட்டியில் துர்ஹாம், வொர்செஸ்டர்ஷைர் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற துர்ஹாம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
துர்ஹாம் அணியின் பேட்டிங் வரிசையில் 6வது வீரராக இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
முதல் 47 பந்தில் அரை சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த 17 பந்தில் சதம் விளாசினார். வொர்செஸ்டர்ஷைர் அணியின் ஜோஷ் பேக்கர் வீசிய 117வது ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி என 34 ரன் எடுத்து சதம் கடந்தார்.
மொத்தம் 64 பந்தில் சதம் விளாசிய இவர், முதல் தர போட்டியில் அதிவேக சதம் அடித்த துர்ஹாம் அணி வீரரானார். இதற்கு முன், துர்ஹாம் வீரர் பால் கோலிங்வுட் 75 பந்தில் சதமடித்தது சாதனையாக இருந்தது.
அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் 88 பந்தில் 17 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 161 ரன் எடுத்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் துர்ஹாம் அணி 6 விக்கெட்டுக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்தப் போட்டியில் 17 சிக்சர் பறக்கவிட்ட ஸ்டோக்ஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார்.
இதற்கு முன் குளோசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய சைமண்ட்ஸ், எசக்ஸ் அணிக்காக பங்கேற்ற கிரஹாம் நேப்பியர் ஆகியோர் தலா 16 சிக்சர் அடித்திருந்தது சாதனையாக இருந்தது.