கவர்னர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு ஆளுநர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மயிலாடுதுறை தருமபுரி ஆதின திருமடத்திற்கு செல்லும் வழியில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் – சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.

மேற்படி சம்பவத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள நிலையில், இது நிச்சயம் தி.மு.க. அரசிற்கு தெரிந்துதான் நடந்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools