தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சனிக்கிழமை மதியம் அவர் சென்னை திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் அவர் யாரை சந்திக்க உள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த காரணத்தால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இதனால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலை கடிதம் எழுதி உள்ளார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.
இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.20 மணிக்கு விஸ்காரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்றும் 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில் அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.