முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கவர்னராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.
காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில் தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் கவர்னர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கவர்னர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!
தமிழ்நாட்டில் எந்தக் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோவில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோவில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோவிலில் போய் கவர்னர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?
தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.