X

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு படிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு, இரண்டு கண்களாக நினைத்து போற்றி வருகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலம் பேணுவதில் மிகச்சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலேயே மிக பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை.

அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பக்கூடிய வகையில் அவர் செய்துகொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படமாட்டார்கள். என்னைப் பொருத்தவரை அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்துகொள்வார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், கவர்னரின் கருத்துக்கு மறைமுகமாக முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.