Tamilசெய்திகள்

கவர்னரை தாக்கி பேசக்கூடாது – எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து இன்று நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நாளை (11-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கோவிசெழியன் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது. இதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரை நிகழ்த்தியபோது சில வாசகங்களை தவிர்த்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கவர்னர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

சட்டசபையில் கவர்னரை தாக்கி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசக்கூடாது. பேனர், சுவர் விளம்பரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இக்கூட்டம் சில நிமிடங்களில் முடிந்தன.