X

கழுகு 2- திரைப்பட விமர்சனம்

கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில், சத்ய சிவா இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘கழுகு’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் ‘கழுகு 2’ அதே அளவு மக்களை ஈர்த்ததா அல்லது அதைவிட அதிகமாக ஈர்க்கிறதா, என்பதை பார்ப்போம்.

கொடைக்கானல் எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது அவ்வபோது செந்நாய்கள் கூட்டம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் உயிருக்கு பயந்து அந்த எஸ்டேட்டில் பணிபுரிய தொழிலாளர்கள் வர மறுக்கிறார்கள். வேட்டைக்காரர்களை பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டு வேலை செய்ய முடிவு செய்யும் அந்த எஸ்டேட் சூப்பர்வைஸ்சர் எம்.எஸ்.பாஸ்கர், திருடர்களான கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட்டை தவறுதலாக வேட்டைக்காரர்கள் என்று நினைத்து, விஷயத்தை சொல்லி அழைக்க, போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்களும் எம்.எஸ்.பாஸ்கருடன் செல்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகளான பிந்து மாதவிக்கு கிருஷ்ணா மீது காதல் வருகிறது. கிருஷ்ணாவும் பிந்து மாதவியை காதலிப்பதோடு, பெரிய திருட்டாக செய்து, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைத்து, அந்த ஊரில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரது வீட்டில் திருட திட்டம் போட, அதனால் வரும் பிரச்சினைகளால், கிருஷ்ணா என்னவானார், அவரது காதல் கைகூடியதா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.

‘கழுகு’ படத்தில் இருந்த அதே லுக்கோடு இருக்கும் கிருஷ்ணா, அதே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். செண்டிமெண்ட் மற்றும் காதல் காட்சி என அனைத்திலும் கிருஷ்ணாவின் நடிப்பு ரியலான பீலிங்கை கொடுக்கிறது. எப்படி கிருஷ்ணாவுக்கு கழுகு முக்கியமான படமாக அமைந்ததோ, அதுபோல இந்த ‘கழுகு 2’வும் அவரை அடையாம் காட்டும் படமாகவே இருக்கிறது.

பிக் பாஸுக்கு பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டாத பிந்து மாதவி, இப்படத்தின் மூலம் முகம் காட்டியிருக்கிறார். படம் முழுவதும் எளிமையான அழகோடு வலம் வருகிறார். கிருஷ்ணாவுடனான அவரது கெமிஸ்ட்ரி நல்லாவே வேலை செய்கிறது. அவரது கதாபாத்திரமும் கதையோடு ஒன்றினைந்திருப்பதால், கவனிக்க வைக்கிறார்.

கதையோடு இணைந்து பயணிக்கும் காமெடி காட்சிகள் மூலம் காளி வெங்கட் சிரிக்க வைக்கிறார். அவரது இயல்பான நடிப்பும், வசன உச்சரிப்பும் வெறும் காமெடியன் என்று கடந்து போகாமல், நல்ல குணச்சித்திர நடிகராகவும் பாராட்டு பெறுகிறார். பிந்து மாதவியின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனக்கே உரித்தான வேடத்தில் அசத்துகிறார். மகளின் தந்தையாகவும், படத்தின் முக்கிய ட்விஸ்ட்டுக்கான கதாபாத்திரமாகவும் அவரது வேடம் படத்தில் பெரிய பங்கு வகிக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் மெட்டுக்கள் அனைத்தும் பீல் குட் ரகங்களாக இருக்கிறது. கழுகு முதல் பாகத்தில் தனது பாடல்கள் மூலம் பலம் சேர்த்த யுவன், இந்த படத்திற்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

கொடைக்கானலின் புதிய அழகை ஓளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்யாஜி நம் கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறார். அடர்ந்த காடு, ஆறு, மலை என்று படம் முழுவதுமே பச்சை பசேல் என்று இருப்பதால், நாமும் காட்டுக்குள் இருப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.

கழுகு படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் இருந்தாலும், அதன் தொடர்ச்சியாக இல்லை. முழுக்க முழுக்க வேறு ஒரு கதைக்களத்தில் பயணித்திருக்கும் இயக்குநர் சத்ய சிவா, கொடைக்கானல் மக்களின் வேறு ஒரு வாழ்க்கை முறையை பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி சற்று தடுமாற்றத்துடன் பயணித்தாலும், துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பதே தெரியாத கிருஷ்ணா, செந்நாய்களை வேட்டையாட களத்தில் இறங்கும் போது படமும் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. பிறகு அரசியல்வாதி வீட்டில் கைவரிசை காட்ட கிருஷ்ணாவும், காளியும் போடும் திட்டமும், அதை செயல்படுத்தும் விதமும், பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.

காதல், செந்நாய் வேட்டை என்று முதல் பாதி சற்று சாதாரணமாக பயணித்தாலும், இரண்டாம் பாதியில் அழுத்தமான கதையோடு பயணிப்பதோடு, எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் மூலம் இயக்குநர் சத்ய சிவா, கதையில் வைத்திருக்கும் ட்விஸ்ட்டால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், ‘கழுகு 2’ நிறைவு

-ஜெ.சுகுமார்