கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு முழுப்பொறுப்பேற்று முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம். அதே போல பா.ஜ.க.வினரும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது,
கள்ளக்குறிச்சி என்றாலே தற்போது கள்ளச்சாராய சாவால் கண்ணீர் மாவட்டமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி எம்.பி. ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால், தற்போது என்ன நடக்கிறது? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பல பேர் பலியாகி உள்ளனர். ஆனால், முதலமைச்சர் நேரில் கூட வந்து ஆறுதல் கூறவில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து பேச உள்ளேன். தமிழக கவர்னரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.