Tamilசெய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் – கைதான பள்ளி நிர்வாகிகளை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் இன்று காலை 11.20 மணிக்கு சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி பள்ளி நிர்வாகிகள் 5 பேரையும் 1 நாள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதோடு நாளை (28-ந் தேதி) நண்பகல் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அழைத்து சென்றனர். முன்னதாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் விழுப்புரம் அழைத்து வந்தனர்.