X

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – 4 முக்கிய ஆணைகள் வெளியீடு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம், கவர்னரை சந்தித்து கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனிடையே, கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் இந்த ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவை:-

* கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

* எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

* சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது உள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்,

* இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.