Tamilசெய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.