Tamilசெய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). வக்கீல். இவருக்கும் காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த சத்யா (வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

இது பற்றி அறிந்ததும் சத்யாவின் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் சத்யா, வெங்கடேசனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு காக்களூர் ஆஞ்சநேயபுரத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் மற்றும் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

அப்போது வீட்டில் வக்கீல் வெங்கடேசனும் இருந்தார். பேச்சுவார்த்தை நடத்துகொண்டு இருந்த போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறும், கைகலப்பும் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சத்யாவின் குடும்பத்தினர் திடீரென வக்கீல் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யா அவர்களை தடுக்க முயன்றார்.

இதில் அவருக்கும் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த வெங்கடேசனும், சத்யாவும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். சத்யா மயக்க நிலையில் இருந்தார். அவரும் இறந்து விட்டதாக பெற்றோர் நினைத்தனர்.

இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் சிலரும் அங்கு திரண்டு வந்தனர்.

உடனே அங்கிருந்த சத்யாவின் குடும்பத்தினர் வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதற்குள் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் சோபனாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வக்கீல் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சத்யா உயிருக்கு போராடியபடி இருந்தார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக சத்யாவின் தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் உள்பட 6 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கொலையுண்ட வெங்கடேசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சத்யாவுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. வெங்கடேசனுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு சத்யா திருநின்றவூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அவர் காக்களூர் ஆஞ்சநேயபுரத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வக்கீல் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் சம்மந்தப்பட்டவர்கள் யார்? யார்? என்று பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கள்ளக்காதல் தகராறில் வக்கீல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.