X

களவாணி 2 படத்தின் மீதான தடை நீங்கியது

நடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2′. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2′ திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.சற்குணம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்ளி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். களவாணி 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, களவாணி 2 திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.