Tamilசெய்திகள்

கல்லூரிகள் திறப்பு – உற்சாகமாக வந்த முதலாம் ஆண்டு மாணவர்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கடந்த மாதம் 8-ந்தேதி கலை அறிவியல் கல்லூரிகளில் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கலைகல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளுக்கு சென்றனர்.

சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கொரோனா பரவலுக்கு இடையே முககவசம் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர்.

கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சில மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாததால் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த மாணவர்கள் இன்று கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் போனது.

முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு முதலாவதாக இன்று வகுப்புகளுக்கு செல்வதால் புதுவிதமான அனுபவத்தை உணர்ந்தனர்.

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்றதால் சானிடைசர் வழங்கப்பட்டது. வகுப்புகளில் சமூக இடைவெளியை பின்பற்றி 20, 25 பேர் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ‘ராக்கிங்’ செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது. கல்லூரி வளாகங்களில் மாணவ-மாணவிகளிடம் ராக்கிங்கில் யாரும் ஈடுபடுகிறார்களா? என்றும் கல்லூரி நிர்வாகம் கண்காணித்தது.

கல்லூரிகளுக்கு பஸ்களில் செல்லும் மாணவர்களையும் போலீசார் கண்காணித்தனர். பிரச்சனைக்குரிய ஒரு சில கல்லூரிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

புதிய மாணவர்களுக்கு இன்று ஓரியன்டே‌ஷன் வகுப்பு நடத்தப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பாடங்களுக்கான அட்டவணை வழங்கப்பட்டது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த முடிவுசெய்யப்பட்டு இருந்தது. முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாளும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு மறுநாளும் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நேரடி வகுப்புக்கு வராத நாட்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.