கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், நேரடி தேர்வு தான் கண்டிப்பாக நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அதற்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கியும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் அது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடன் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களை கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மர்றும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இனிமேல் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) அனைத்து வகுப்புகளும் ஆப்லைன் (நேரடி) முறையில் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் திட்டமிட வேண்டும்.
செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும். பாடத்திட்டம் முழுமையாக உள்ள நிறுவனங்களில் குறிப்பாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்து, திருத்தப்பட்ட அட்டவணையை இந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பின்பற்றும்போது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் சேர்த்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.