X

கல்கி பகவான் ஆசிரமத்தில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் நிறுவி ஆன்மிக பணிகளை செய்து வருகிறார்.

கல்கி ஆசிரமத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. சென்னையில் 20 கிளைகள் இருக்கின்றன.

கல்கி ஆசிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையே கல்கி பகவான் விஜயகுமார் மீது, பக்தர்களுக்கு போதை பொருட்களை கொடுத்ததாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டை நடத்தினார் என்றும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து 40 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசிரம அலுவலகம், திருவள்ளூர் நேமத்தில் உள்ள ஆசிரமம், ஆந்திர மாநிலம், கோவர்த்தனபுரம் கல்கி ஆசிரமம், தெலுங்கானாவில் உள்ள ஆசிரமம் மற்றும் என்.கோபிகிருஷ்ணாவின் தொழில் நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடந்தது.

இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடித்து வருகிறது. கல்கி ஆசிரமம் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள கணக்கு வழக்குகள், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கல்கி பகவான் விஜயகுமார் மகன் என்.கே.வி. கிருஷ்ணா தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின் பேரில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும் அளவில் கணக்கில் வராத பணம், வெளிநாட்டு பணம் இருப்பது தெரிய வந்தது.

அங்கு தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. என்.கே.வி. கிருஷ்ணாவின் தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது. கணக்கில் வராத பணத்தை நிலம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான விவரங்கள் கிடைத்துள்ளன.

சென்னை, ஆம்பூர், மதுரை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள ரெஸ்டாரண்டுகளிலும் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது. அங்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் பணத்தை ரொக்கமாக கொடுத்தே செயல்பட்டு உள்ளனர். இதனால் எளிதாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சோதனையில் இதுவரை ரூ.33 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலகோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து சோதனை நீடித்து வருவதால் இன்னும் அதிக தொகை பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: south news