மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
அதன்படி தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த ‘கலைஞர் 100 விழா’ தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.