கலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக,நேயர்களை கவர புதிய நெடுந்தொடர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை எடுத்துச் சொல்லும் – பூவே செம்பூவே.இந்நெடுந்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதில் நாயகியாக பத்ரா என்ற நேர்மையான இளம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை மௌனிகா நடிக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்டு அதற்கு உரிய தண்டனை வாங்கித் தர துடிக்கும் இவருக்கு, குடும்ப ரீதியாகவும், பணி ரீதியாகவும் சவாலாக விளங்கும் அண்ணி கதாபாத்திரத்தில் உமா மகேஸ்வரி (இ.ஆ.ப)’ யாக பிரபல நடிகை ஷமிதா வில்லத்தனத்தில் அடுத்த பரிமாணத்தை காட்டி மிரட்ட வருகிறார்.
ஒரு சராசரி தமிழ் குடும்பத்தை பின்புலமாக கொண்டு அமைக்கப்பட்ட களத்தில், பணியிலிருக்கும் குடும்ப பெண்கள் சந்திக்கும் முரண்பாடுகளை மையப்படுத்தி இந்த தொடரின் கதை நகர்கிறது. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தனது கடமையை செவ்வனே செய்து, தனது குடும்ப மானத்தையும் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களோடு சொல்லி இருக்கிறார்கள். தனது கணவன் மீதான காதலுக்கிடையே, கடமையை ஆற்ற பாடுபடும் பத்ரா, உமா மகேஷ்வரியால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள்? தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதே இந்த தொடரின் மீதிக்கதை.
லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இயக்குனர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே காத்து கருப்பு, ஜீ பூம் பா, ரோஜா கூட்டம் மற்றும் என் தோழி, என் காதலி, என் மனைவி உள்ளிட்ட பல்வேறு சூப்பர்ஹிட் தொடர்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் பேசும்போது, “தங்க பதக்கம் மற்றும் கவுரவம் படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் போன்று, ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா. அதனை பூவே செம்பூவே தொடர் நிச்சயம் நிறைவேற்றி வைக்கும் என்பதோடு, நேயர்கள் விரும்பும் தொடராகவும் இது அமையும் என்பதில் ஐயமில்லை.மௌனிகா, ஷமிதா ஆகிய இருவருமே அவர்களது கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்கள். அவர்களது திரை பயணத்தில் பெயர் சொல்லும் தொடராக இது நிச்சயம் இருக்கும்”. இந்த நெடுந்தொடரை குள்ள நரி கூட்டம் திரைப்பட இயக்குனர் ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார்.