Tamilசெய்திகள்

கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ம.க ஆர்பாட்டம் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தகட்டத்தை அடைந்திருக்கின்றன. அதன்படி, வரும் 29-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது.

டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி இன்று வரை கடந்த 2 மாதங்களாக போராட்டமே நமது வாழ்க்கை முறையாகி விட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 கட்டங்களாக 8 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக நாம் தீவிரமாக போராடி வருகிறோம். ஒவ்வொரு கட்ட போராட்டமுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன. அந்த வகையில் 29-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் நடைபெறவுள்ள 6-ம் கட்ட மக்கள்திரள் போராட்டமும் வெற்றி பெறப்போவது உறுதியிலும் உறுதியாகும்.

வன்னியர்களுக்கான உள் இடப்பங்கீட்டை வென்றெடுக்கும் வரை நாம் ஓயப்போவது இல்லை. அதற்காக என்ன விலை கொடுக்கவும், எத்தகைய தியாகங்களை செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நாம் சத்திரியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

1989-ம் ஆண்டில் தொடங்கி இப்போது வரையிலான 32 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு தனி இடப்பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முன் இருந்த அரசுகளிடமும் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்; அதற்காக ஏராளமான போராட்டங்களையும் நடத்தினோம். ஆனாலும் பயனில்லை.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி நமது போராட்டப் பயணம் 40 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைப்பதை இனியும் எந்த சக்தியாலும் தாமதப்படுத்த முடியாது.

பாட்டாளி இளைஞர்களே, பாட்டாளி சொந்தங்களே உங்களின் உழைப்புக்கும், போராட்டத்திற்கும் பயன் கிடைக்கும் நாள் நெருங்கி விட்டது. முழு உணர்வுடன் 29-ந் தேதி போராட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் நமது இடஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.