Tamilசெய்திகள்

கலெக்டருக்கு எதிர்ப்பு! – கருப்பு பேட்ச் உடன் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள்

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான ஆணையை இன்று வழங்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களை சஸ்பெண்டு செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வாட்ஸ்-அப்பில் எச்சரித்து தகவல் அனுப்பினார்.

இந்த வாட்ஸ்-அப் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவண்ணாமலையில் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாள் பாரி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலெக்டரின் செயல்பாட்டை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் பாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் பொருளாதார கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பலர் இந்த திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் வீடு கட்டி முடிக்க முடியவில்லை என்று இந்த திட்டத்தை ஏற்க மறுக்கின்றனர். சிலர் அஸ்திவாரம் போட்ட பின்கூட வீடு கட்ட பணம் எடுக்க முடியவில்லை என்று திட்டத்தை வேண்டாம் என்று கூறுகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் பணம் மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதில் உள்ள நடைமுறை சிக்கலை கலெக்டரிடம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கூறும்போது, அதுயெல்லாம் எனக்கு தெரியாது என்கிறார். உயர் அதிகாரியாக உள்ளவர் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த திட்டத்தில் சாதனை புரிய வேண்டும் என்ற மத்திய, மாநில அரசின் செயல்பாட்டால் ஏற்படும் பிரச்சனையாகும்.

கலெக்டரின் இந்த செயல்பாட்டை கண்டித்து இன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வது என்றும், நாளை மறுநாள் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலங்கள் முன்பு இந்த திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் 25-ந்தேதி சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் முறையிடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

கலெக்டரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *