அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சில நாட்களாக அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக கனமழை கொட்டியது. ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் சாந்தா குரூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் மீட்பு பணிகளும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக 34 மாவட்டங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் மக்கள் இருளில் தவிக்கிறார்கள்.
மத்திய பகுதியில் அமைந்துள்ள துலே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரை பகுதியில் வசித்த 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்துக்கு பேரிடர் கால உதவி வழங்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.