கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நாளை ராகுல் காந்தி செல்கிறார்

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. கடந்த 50 தினங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.

கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் உள்ளது.

மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா நேற்று எடுத்துரைத்தார்.

இந்நிலையில், 2 நாள் பயணமாக ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜூன் 29, 30-ம் தேதிகளில் மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்கிறார். தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார்.

மணிப்பூர் ஏறக்குறைய 2 மாதமாக எரிந்து கொண்டிருக்கிறது. சமூகம் மோதலில் இருந்து அமைதிக்கு நகரும் வகையில் ஒரு குணப்படுத்தும் தொடுதல் தேவைப்படுகிறது. இது ஒரு மனிதாபிமான செயலுக்கானது. வெறுப்புக்கானது அல்ல, அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news