கற்பழிப்பு குற்றவாளிக்கு ஜாமீன்! – எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த இளம் பெண்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், நேற்று உன்னாவ் பகுதியில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வந்துள்ளார். அலுவலகத்திற்கு வெளியே சென்ற அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்தப் பெண், மீட்கப்பட்டு கான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விசாரணையில் அந்தப் பெண், தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்திருப்பதும், காதலன் முன்ஜாமீன் பெற்றதால் ஆத்திரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதுபற்றி உன்னாவ் எஸ்பி விக்ராந்த் வீர் கூறும்போது, ‘தீக்குளித்த பெண் ஹாலட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதி முன்னிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்து வருகிறோம்.
அந்த பெண் தன்னுடன் பழகிய நபர் மீது கடந்த அக்டோபர் 2ம் தேதி கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பின்னர் குற்றவாளி, நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். இருவரும் 10 ஆண்டுகளாக பழகி உள்ளனர். திருமணம் செய்ய மறுத்தையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் வெளியிடப்பட்டுவிட்டது’ என்றார்.
உன்னாவ் மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண், நீதிமன்றத்திற்கு செல்லும்போது எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்துள்ள மேலும் ஒரு பெண் தீக்குளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.