X

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்! – ரத்ததானம் செய்த வாலிபர் வாக்குமூலம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் கர்ப்பிணி மனைவியான 23 வயது பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என்பதும், அந்த ரத்தம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக கொடுத்தது எனவும் தெரியவந்தது.

இந்த நிலையில் மருத்துவ குழுவினரும், போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். இதனால் அந்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கூறியதாவது:

சிவகாசியில் வேலை பார்த்து வந்த நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ரத்த தானம் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக ரத்த வங்கியினர் கூறவில்லை.

அதன்பிறகு கடந்த சில மாதங்களாக நான் பெங்களூரு சென்று விட்டேன். இந்த நிலையில் உறவுப்பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் டிசம்பர் 3-ந்தேதி சிவகாசி வந்து ரத்ததானம் செய்தேன். அதனை பெற்றவர்களும் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் வெளிநாடு செல்ல திட்டமிட்டேன். அதற்காக கடந்த 8-ந்தேதி மதுரை மேலூரில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது தான் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சிவகாசி சென்று அங்கு வேறு ரத்த வங்கியில் பரிசோதனை செய்தேன். அதிலும் எச்.ஐ. வி. தொற்று இருப்பது உறுதியானது.

எனவே நானாகவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு கடந்த 10-ந்தேதி சென்று இதுபற்றி தெரிவித்தேன். நான் தானம் கொடுத்த ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்றேன். அங்கிருந்த ஊழியர்கள் உங்கள் உறவினருக்கு செலுத்தவில்லை எனக் கூறியதால் நான் வீடு திரும்பி விட்டேன்.

இந்த சூழலில் தான் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எனது ரத்தம் வழங்கப்பட்ட விவரம் தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ளது.

2016 முதல் ரத்தம் வழங்கிவரும் நிலையில் கடந்த 3-ந்தேதி ரத்த தானம் கொடுத்த பிறகும் சரி ரத்தவங்கி ஊழியர்கள் யாரும் எனக்கு எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.

நானாக முன்வந்தே இதனை தெரிவித்தேன். முன்பே தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்து இருக்க மாட்டேன். ஆனால் தற்போது என்னை போனில் தேடியதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. கடந்த 3-ந்தேதி கூட ரத்ததானம் செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news