Tamilசெய்திகள்

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் பரிமாற்றம்! – தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர்-செயலர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி சிவகாசி அரசு ரத்த வங்கியில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த தானம் செய்தார். அவரது ரத்தம் சிவகாசி அரசு ரத்த வங்கியில் அனைத்து சோதனைகளும் செய்யப்பட்ட பிறகே டிசம்பர் 3-ந்தேதி சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.

அதன்பிறகு, அந்த பெண்ணிற்கு காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து டிசம்பர் 17-ந்தேதி சாத்தூர் நம்பிக்கை மையத்தில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது, ரத்த பரிமாற்றத்துக்கு பிறகு தான் நடந்ததா? என்பதை கண்டறிய விருதுநகர் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் பாதிக்கப்பட்ட பெண், சிவகாசி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி, ஆய்வக உதவியாளர், சிவகாசி ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்தல் மற்றும் நம்பிக்கை மையத்தின் ஆய்வக உதவியாளர், ஆலோசகர், விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி ஆகியோரிடம் கடந்த 24-ந்தேதி விசாரணை நடத்தினார்.

இந்த நிகழ்வு குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ள மதுரை மாவட்ட ரத்த பரிமாற்று அதிகாரி மற்றும் ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் சிந்தா தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர் குழு சிவகாசிக்கு அனுப்பப்பட்டு தற்போது விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 18-ந்தேதி முதலே அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி.- க்காக கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எச்.ஐ.வி. கிருமி முழுமையாக தடுப்பு செய்யப்பட்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், குழந்தை பிரசவிக்கும் வரை பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து கண்காணிக்கவும், பிரசவத்தின் போது, குழந்தைக்கு நோய்த்தொற்று வராமல் இருக்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உடல்நலமான குழந்தையை பெற்றெடுப்பதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட இணை இயக்குனருக்கு (மருத்துவம்) அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு உள்ளிட்ட அவரது வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *