கர்நாடக முதல்வர் குறித்து காங்கிரஸ் மேலிடத்தில் புகார் தெரிவித்த சித்தராமையா

கர்நாடக மந்திரிசபை கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 8 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். அதிருப்தியை சமாளிக்கும் விதமாக 19 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்த பட்டியல்படி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

மந்திரிசபை விரிவாக்கம் நடந்து, 15 நாட்கள் ஆகியும் வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், 14 வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து குமாரசாமி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 வாரிய தலைவர்களை நியமனம் செய்ய குமாரசாமி மறுத்து விட்டார். இதனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தில் குமாரசாமியின் நடவடிக்கை குறித்து புகார் செய்தார்.

அதாவது காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கிய வாரிய தலைவர்கள் பட்டியலில் 5 பேரின் நியமனத்திற்கு குமாரசாமி ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறினார். இந்த பிரச்சினையை உடனே பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news