பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் 11ம் தேதி முடிவடைந்தது. நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹசன், மாண்டியா ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தொடர்புடைய நபர்கள், முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளின் இந்த சோதனை நடந்தது. பல்வேறு தொழிலதிபர்கள் வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரியல் எஸ்டேட், கல் குவாரி, அரசு ஒப்பந்ததாரர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், சாமில் மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தலும், 23-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.