X

கர்நாடக மாநிலத்தில் தொடரும் கன மழை – ஒகேனக்கலில் 7வது நாளாக வெள்ளப் பெருக்கு

கர்நாடக மாநில மலை மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 1 லட்சத்து 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் மாறி மாறி திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 2-வது நாளாக வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 7-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளே தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மேலும் பாறைகளே தெரியாத அளவுக்கு ஐவர் பாணியை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மீதும் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 8-வது நாளாக தடை விதித்துள்ளது. தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பினர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.