கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் கே.ஆர்.புரத்தில் உள்ள சாய் லே-அவுட், எஸ்.ஆர். லே-அவுட், காயத்ரி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
சிங்காபுரா பகுதியில் ராஜகால்வாய் உடைந்து வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுபோல கே.ஆர்.புரம் அருகே கல்கெரே என்ற கிராமத்தில் உள்ள ஏரியின் கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. தலைநகர் பெங்களூருவில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
கதக் மாவட்டத்தில் உள்ள ரோனாவில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக ரோனா தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த வெள்ளம் நேற்றும் வடியாமல் இருந்தது.
இந்த நிலையில் ரோனா அருகே இடகி கிராமத்தில் அரசு பஸ் சென்றது. அப்போது கிராமத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. சாலையோர பள்ளத்திற்குள் பஸ் சிக்கியது. அப்பகுதியில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ்சில் இருந்த பயணிகள் செய்வது அறியாமல் திகைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோனா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பஸ்சில் இருந்த 6 பெண் பயணிகள், 2 குழந்தைகள் உள்பட 22 பேரை பத்திரமாக மீட்டார்கள். கர்நாடக மாநிலத்தில் தொடரும் மழையினால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.