கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

பின்னர் அடுத்தடுத்து பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி இரண்டு டோஸ்களும் செலுத்தியவர்கள் ஆவர்.

இதனால், மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதேசமயம் கொரோனா பரிசோததனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்றைய நிலவரப்படி 281 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதையடுத்து கல்லூரி மூடப்பட்டது. வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

அதேபோல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய உள்நோயாளிகள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வெளியில் இருந்து மக்கள் வருவதற்கும், உள்ளே இருந்து வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பால் மருத்துவமனையின் தலைவரும், கர்நாடகாவில் உள்ள கொரோனா தடுப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் சுதர்சன் பல்லால் கூறுகையில், கொரோனா பரவி வருவது கவலைக்குரியதாக உள்ளது என்றார். அதேசமயம் பாதிப்பு கடுமையாக இல்லை என்றும் அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools