X

கர்நாடக மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் – அமைச்சர் அமித்ஷா

கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவில் அமித் ஷாவுடன் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரோடு ஷோவை தொடர்ந்து பொது மக்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை வாக்காளர்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் சித்தராமையா சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி பொது மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.”

“கர்நாடகா மாநிலத்தின் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.