பா.ஜ.க. பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி குறித்து அண்ணாமலையிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கைகளை முடக்க மரபுகளுக்கு புறம்பாக மத்திய அரசு மேற்கொண்ட சர்வாதிகார அராஜக நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நரேந்திர மோடி மீது வெறுப்பு பார்வை விழுந்துள்ளது.
ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பொறுப்பான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் இந்தியாவின் சட்டம்-ஒழுங்கை கெடுத்திருக்க முடியும். இந்த அரசாங்கத்தை திணறடித்து இருக்க முடியும்.
ராகுல் காந்தியின் கடுமையான வழிகாட்டுதல் அடிப்படையில் மகாத்மா காந்தி எப்படி இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக அழுத்தமாக போராட்டங்களை நடத்துவரோ அதேபோன்றதொரு போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ச்சியாக ஒரு மாதம் பல்வேறு விதமான போராட்டங்களை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மாவட்ட, வட்டார, நகர அளவில் நடத்த உள்ளோம். இதற்காக வருகிற 31-ந் தேதி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.
ஏப்ரல் 15-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம், உ்ணணாவிரதம் நடத்தப்படும். இதுபோன்ற போராட்டங்களின் மூலம் ராகுல் காந்தி யார்? காங்கிரஸ் இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்? என்பதை நிரூபிப்போம்.
ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.2 ஆயிரத்து 600 கோடிக்கு மிகப்பெரிய முறைகேடு, ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊழலில் அரசியல் பின்னணி உள்ளது. பா.ஜ.க. இதற்கு பின்னால் உள்ளது. அதானி முறைகேடுகளுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பது போன்று ஆருத்ரா மோசடிக்கு பின்னால் தமிழக பா.ஜ.க உள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளார். இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆதரவு இருக்கிறது என தெரிவித்ததன் அடிப்படையில் முதலீடு செய்தோம் என பலர் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலைக்கும், இந்த நிதி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என போலீசார் விசாரிக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூட நாங்கள் சொல்லவில்லை. குறைந்தபட்சம் விசாரணையாவது நடத்த வேண்டும். எனவே, அண்ணாமலையை நேரடியாக அழைத்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இந்த மோசடி குறித்த உண்மை வெளிவரும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர்.
சமீபகாலமாக எந்த குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். குற்றவாளிகளின் புகலிடமாக பா.ஜ.க. இருக்கின்றது. குற்றவாளிகள் பாதுகாப்புக்காக அக்கட்சியில் இருக்கிறார்கள். இது தேசத்துக்கு நல்லதல்ல. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.